பதவி உயர்வு பெற்ற 1 மாதத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை


பதவி உயர்வு பெற்ற 1 மாதத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2021 6:02 AM GMT (Updated: 13 Feb 2021 6:02 AM GMT)

அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர், ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

திரு.வி.க. நகர்,

அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின் பேரில், அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிம் என்பவர் கேட்ட ரூ. 15 ஆயிரம் ரூபாயை ரசாயனம் தடவி புகார்தாரரிடம் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து டீக்கடை அருகே சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் லஞ்ச பணத்தை வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு குமரகுரு தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உட்பட 24 பேர் விமான நிலையத்தில் நிரந்தர வேலை கேட்டு தலா ரூ.50 ஆயிரத்தை விமான நிலைய பெண் அதிகாரி ஒருவரிடம் கொடுத்ததாகவும், தொடர்ந்து அந்த பெண் அதிகாரி ஏமாற்றியதால் இதுகுறித்து கமிஷனர் அலுவலகத்தில் 24 பேரும் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரை அம்பத்தூர் போலீசார் விசாரிக்க கமிஷனர் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த புகாரை தொடர்ந்து விசாரிக்க சப்-இன்ஸ்பெக் டர் தமிம், புகார்தாரரிடம் ஏற்கனவே 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற நிலையில், மேலும் 15 ஆயிரம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இந்த நிலையில், அதை கொடுக்க மனமில்லாத புகார்தாரர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்ததை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தமிம் பிடிபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அம்பத்தூர் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடிபட்ட சப்-இன்ஸ்பெக்டர் தமிம் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது கடந்த ஒரு மாதமாக சப்-இன்ஸ்பெக்டராக அம்பத்தூர் குற்றப் பிரிவில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story