கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ்நிலைய கட்டுமான பணி - ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு


கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ்நிலைய கட்டுமான பணி - ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு
x
தினத்தந்தி 13 Feb 2021 6:13 AM GMT (Updated: 13 Feb 2021 6:13 AM GMT)

கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் புறநகர் பஸ்நிலைய கட்டுமான பணி நடந்து வருகிறது. இதை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

வண்டலூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பஸ்நிலையம் நிலையம் கட்டுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி புறநகர் பஸ்நிலையம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். கடந்த 2 ஆண்டுகளாக புறநகர் பஸ்நிலையம் நிலையம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.

தற்போது இந்த புறநகர் பஸ் நிலையத்தில் ஜி.எஸ்.டி. சாலை ஓரம் ஒட்டியுள்ள பகுதிகளில் மாநகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இன்னும் சில நாட்களில் மாநகர பஸ் நிலையம் மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ் நிலையம் கட்டுமான பணி 60 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புறநகர் பஸ்நிலைய கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் சி.எம்.டி.ஏ. உயர் அதிகாரிகள், செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா என்கிற கஜேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story