ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்க மறுப்பு; விவசாயிகள் திட்டவட்டம்
6 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்க முடியாது என்று பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக எழுதி் கொடுத்தனர்.
நிலம் கொடுக்க முடியாது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3 ஆயிரத்து 700 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சாலை கண்ணிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், தொளவெடு, காக்கவாக்கம், தும்பாக்கம், பருத்திமேனிகுப்பம், பாலவாக்கம், சென்னங்காரணி, போந்தவாக்கம், சீதஞ்சேரி வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. இதற்காக நிலம் அளவிடும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சாலை அமைக்கும் விவகாரத்தில் கடைசி கட்ட கருத்து கேட்பு கூட்டம் நேற்று ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மேற்குறிப்பிட்ட கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டு நாங்கள் 6 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி எழுதி கொடுத்தனர்.
கல்குவாரி
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் மூலமாக கல்குவாரி தொடங்கப்பட உள்ளது. இதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஊத்துக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பொன்னையா கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூனிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரகு தலைமையில் பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கிராவல் எடுத்தால் தங்கள் கிராமத்தில் விளைநிலங்கள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர் பொன்னையா ஒரு மீட்டர் ஆழத்துக்கு மட்டும் கிராவல் எடுக்க உள்ளதால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்தார். இந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தூர்பாண்டி, ஊத்துக்கோட்டை தாசில்தார் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story