தந்தையின் உடலை கொண்டுவர 2 மாதமாக போராடும் மகன்
வெளிநாட்டில் இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மகன் போராடி வருகிறார்.
ராமநாதபுரம்,
வெளிநாட்டில் இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மகன் போராடி வருகிறார்.
வெளிநாடு
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள ரெகுநாதபுரம் மேலூர் தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் அழகு (வயது55). இவருக்கு திருமணமாகி விஜயா என்ற மனைவியும், தினகரன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். கடந்த 27 ஆண்டுகளாக சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வந்த அழகு 20 ஆண்டுகள் ஒரு கம்பெனியில் தோட்ட வேலையும், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றொரு கம்பெனியில் ரோடு கிளினீங் வேலையும் செய்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டிற்கு வந்துவிட்டு சென்ற அழகு தினமும் குடும்பத்தினரிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார்.
பாதிப்பு
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி திடீரென்று அவர் வேலைக்கு சென்ற இடத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். முதல்நாள் வரை நன்றாக பேசிய அழகு மறுநாள் காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவரின் மகன் தினகரன் மத்திய மாநிலஅரசுகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை தாழ்வான முள்மரத்தில் கால்கள் தரையில் மடங்கிய நிலையில் தூக்குபோட்டிருப்பது போன்று அனுப்பிய புகைப்படத்தினை கண்ட நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரின் சாவில் மர்மம் உள்ளது.
மேலும், எனது தந்தை வேலைபார்த்த நிறுவனத்தினர் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. உடன் வேலைபார்த்தவர்களும் தற்போது பேச மறுத்துவருகின்றனர். எனது தந்தையின் உடலை கொண்டுவரக்கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற, உறுப்பினர்களுக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது தந்தை இறந்ததில் இருந்து தாய் மற்றும் பாட்டி ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நடவடிக்கை
எனவே, மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து எனது தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதோடு, அவரின் உடமைகள் மற்றும் நிறுவனத்தின் பணபலன்கள் முதலியவற்றை கிடைக்க செய்ய வேண்டும். மேலும், எனது தந்தை இறந்ததற்கான உண்மை நிலையை கண்டறிந்து தவறு செய்தவர்கள் மீது அந்தநாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. வெளிநாட்டில் இறந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து தாய் மற்றும் தங்கைகளிடம் காட்டிவிட வேண்டும் என்று 2 மாதங்களுக்கும் மேலாக மகன் போராடிவருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
Related Tags :
Next Story