200 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு ஆர்.எஸ்.பாரதி
200 தொகுதிகளில் தி மு க வுக்கு வெற்றி வாய்ப்புஅமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
திருப்பூர் :
தமிழகத்தில் 200 தொகுதிகளில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகம்
தி.மு.க. திருப்பூர் கிழக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு திருப்பூர் பலவஞ்சிப்பாளையத்தில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் வழக்கறிஞர் களப்பணி அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இதை தி.மு.க. அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர்கள் நடராஜன் (திருப்பூர் தெற்கு), செல்வராஜ் (திருப்பூர் கிழக்கு), தங்கமணி (திருப்பூர்வடக்கு), தி.மு.க. சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மேற்கு மண்டல தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோல் திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தம் வரவேற்றார். வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகத்தை தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்தார். இதில் திருப்பூர் மத்திய மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சட்டப்பூர்வமான நடவடிக்கைகள்
விழாவில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலமாகவே பணியை மேற்கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தொடங்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது.
கடந்த முறை சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது. இந்த பகுதியில் இருந்து தான் முதல்-அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், மின்சார துறை அமைச்சர் தேர்வாகி உள்ளனர். வேலுமணி, தங்கமணி என நிறைய மணிகள் இங்கு இருக்கிறார்கள். மணிகள் (பணம்) இருந்தாலும் நாம் சட்டத்தின் மூலமாகவே சமாளிக்க முடியும். இந்த பகுதியில் உள்ள 56 தொகுதிகளில் 46 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நமக்கு உள்ளது. பூத் வாரியாக, சட்டமன்ற தொகுதி வாரியாக வழக்கறிஞர் குழுவை அமைத்து பணியாற்ற வேண்டும். இந்த களப்பணி அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும்.
200 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு
சட்டமன்ற தேர்தலில் 180 முதல் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. மு.க.ஸ்டாலினே முதல்-அமைச்சராக வருவார் என்று மக்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு மக்களிடம் எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 40 நாட்களே இருப்பதால் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நாம் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story