சம்பளம் வழங்கக்கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தொழில்நுட்ப அலுவலர்கள் முற்றுகை


சம்பளம் வழங்கக்கோரி  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தொழில்நுட்ப அலுவலர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Feb 2021 10:32 PM IST (Updated: 13 Feb 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்கக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தொழில்நுட்ப அலுவலர்கள் முற்றுகை ‌ சிதம்பரத்தில் பரபரப்பு

சிதம்பரம் , 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர்கள், இளநிலை தொழில்நுட்ப அலுவலர்கள் கிரேடு-2, இளநிலை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் கிரேடு-2 ஆகிய பதவிகளில் பணியாற்றி வந்த 179 அலுவலர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலுள்ள 10 பொறியியல் கல்லூரிகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர். பணி நிரவல் செய்யப்பட்ட அனைவரும் டிப்ளமோ முதல் முதுநிலை பொறியியல் படிப்பு வரை படித்தவர்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 15 ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை பணியாற்றி வந்த இவர்களை பணி நிரவல் செய்யும் போது பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்ட பொறுப்பையோ, அதற்கு இணையான பொறுப்பையோ, வழங்காமல் என்ட்ரி லெவல் டெக்னீசியன் என்ற பெயரில் பல்வேறு கல்லூரிகளுக்கு பணிக்கு அனுப்பப்பட்டனர். 

முற்றுகை

இந்த நிலையில் பணி நிரவல் செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பணி நிரவல் செய்யப்பட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கவேண்டும் எனவும், கடந்த 2 மாதமாக வழங்கப்படாத சம்பளத்தை உடனே வழங்க கோரியும் கோஷம் எழுப்பியபடி பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவாளர் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, கோரிக்கைகள் குறித்து உயர்கல்வித்துறை செயலாளரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனை ஏற்ற தொழில்நுட்ப அலுவலர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story