மீனவர் வீட்டில் பீரோவை உடைத்து 33 பவுன் நகைகள், ரூ.46 லட்சம் கொள்ளை
மீனவர் வீட்டில் பீரோவை உடைத்து 33 பவுன் நகைகள், ரூ.46 லட்சம் கொள்ளை
நாகப்பட்டினம்:
நாகையில், மீனவர் வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த 33 பவுன் நகைகள், ரூ.46 லட்சத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மீன் வியாபாரம்
நாகை கீச்சாங்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அஞ்சப்பன். மீனவர். இவரது மனைவி தேவி. மீன் வியாபாரியான இவர், படகில் மீன்பிடித்து வரும் மீனவர்களிடம் மொத்தமாக மீனை வாங்கி வெளியூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறார்.
கணவன்-மனைவி இருவரும் நேற்று அதிகாலை வழக்கம்போல் தங்கள் வீட்டை பூட்டி விட்டு நாகை துறைமுகத்திற்கு மீன் ஏலம் எடுக்க சென்றனர்.
33 பவுன் நகைகள்-ரூ.46 லட்சம் கொள்ளை
மீன் வியாபாரத்தை முடித்து விட்டு கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டுக்கு காலை 9.30 மணிக்கு திரும்பி வந்தனர். வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது..
அந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 33 பவுன் நகைகள் மற்றும் ரூ.46 லட்சத்தை காணாதது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாடி வழியாக உள்ளே நுழைந்துள்ளனர்
மீன் ஏலம் எடுப்பதற்காக தேவி வீ்ட்டில் லட்சக்கணக்கில் பணம் வைத்து இருப்பதை நன்கு தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
அதன்படி நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வியாபாரத்திற்காக துறைமுகத்திற்கு சென்று விட்டதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அஞ்சப்பன் வீட்டின் மாடியில் ஏறி அங்கிருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உள்ளனர். பின்னர் வீட்டில் பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
போலீஸ் மோப்ப நாய்
இந்த கொள்ளை சம்பவம் குறித்து நாகை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தேவி தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகையில் மீனவர் வீட்டில் பீரோவை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--------
----
Reporter : A.Thilagaraj Location : Tanjore - Nagapattinam
Related Tags :
Next Story