மதுரை புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழா
மதுரை புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழாவில் நேற்று தேர்பவனி நடந்தது.
புதூர்,
மதுரை புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழாவில் நேற்று தேர்பவனி நடந்தது. இன்று பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
கொடியேற்றம்
மதுரை கோ.புதூர் தூய லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி சலேசிய மாநில தலைவர் அகிலன், கொடியேற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து 'மரியாள்-மாட்சியின் ஆலயம்' என்ற தலைப்பில் மறையுரையும் நடைபெற்றது.
இதுபோல், தினமும் காலையிலும் மாலையிலும் நவநாள் சிறப்பு திருப்பலியும், திருப்பயணிகளாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நற்கருணையும் பவனி நடந்தது.
தேர் பவனி
இந்தநிலையில், நேற்று இரவு மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை தாஸ் கென்னடி, உதவி பங்கு தந்தையர்கள் பாக்கியராஜ், ஆஷ்லி, அருண், மரியதாஸ், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து அன்னையின் தேரானது பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. இந்த தேர்பவனி சந்தன மாதா கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மாதா கோவில் மெயின் ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாதாவிற்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story