விவசாயிகளின் ரூ.396½ கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி
குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பெற்ற ரூ.396½ கோடி விவசாய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பெற்ற ரூ.396½ கோடி விவசாய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட இருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.
ரூ.2½ லட்சம் வரை கடன்
தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று, நிலுவை வைத்துள்ள 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் கடன் நிலுவை தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த 31-1-2021 வரை இந்த மாவட்டத்தில் உள்ள 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 558 விவசாயிகள் குறைந்தது ரூ.5 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.2½ லட்சம் வரை விவசாய பயிர்க்கடன் பெற்றுள்ளனர்.
ரூ.396½ கோடி தள்ளுபடி
இதன்மூலம் ரூ.396 கோடியே 62 லட்சம் விவசாய பயிர்க்கடன் தொகை மற்றும் வட்டி நிலுவையில் உள்ளது. முதல்-அமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து இந்த பயிர்க்கடன்கள் மற்றும் வட்டித் தொகையான ரூ.396½ கோடி தள்ளுபடி செய்யப்பட இருக்கிறது.
இதையொட்டி வட்டி மற்றும் கடன் தொகை நிலுவையில் வைத்துள்ள விவசாயிகளின் பெயர், அவர்களுடைய கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் எண், ஆதார் கார்டு எண் ஆகியவற்றை சரிபார்க்கும் பணி அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடந்து வருகிறது.
சான்றிதழ்
இந்த பணி நிறைவடைந்த உடன், இந்த வாரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பயிர்க்கடன் மற்றும் வட்டி ஆகியவை தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story