தச்சு தொழிலாளிகள் 2 பேர் சாவு
பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தச்சு தொழிலாளிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 62). கோட்டூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (47). இருவரும் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடித்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் பல்லடம் ரோடு விஜயபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பினர். பின்னர் பொள்ளாச்சிக்கு வருவதற்கு மோட்டார் சைக்கிளை ரோட்டின் வலதுபுறம் திரும்பியதாக தெரிகிறது.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டத்தில் பெருமாள், சண்முகசுந்தரம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அக்கம், பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெருமாள், சண்முகசுந்தரம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் திருப்பூரை சேர்ந்த தாமோதரன், காரில் இருந்த மைக்கேல் ஆகியோர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story