திருச்சி-ராமேசுவரம் பைபாஸ் சாலை பணி மும்முரம்
திருச்சி-ராமேசுவரம் பைபாஸ் சாலை பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேவகோட்டை,
திருச்சி-ராமேசுவரம் பைபாஸ் சாலை பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சாலை பணி மும்முரம்
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை சார்பில் பைபாஸ் சாலை பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் ஏறத்தாழ நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்த சாலை பணிகள் திருமயம் பகுதியில் இருந்து காரைக்குடி, தேவகோட்டை வழியாக ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது.
திருமயம் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த சாலை பணி காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா வரை நிறைவு பெற்று உள்ளது. ரஸ்தா ரெயில்வே நிலையத்தில் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு பில்லர்கள் அமைக்கப்பட்டு சாலைகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பயண நேரம் குறையும்
இந்த பணிகள் இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் இந்த சாலை மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
தற்போது இந்த பைபாஸ் சாலை முழுமையாக நிறைவு பெற்றால் சென்னையில் இருந்து திருச்சி வழியாக ராமேசுவரத்திற்கு வாகனங்களில் செல்லும் பயணிகள் காரைக்குடி, தேவகோட்டை நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக நேரடியாக ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்திற்கு சென்றடையலாம். இதனால் அவர்களுக்கு 3 மணி நேரம் பயண நேரம் குறையும். எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story