பர்கூர் அருகே சிறுவன் கொலை: தூத்துக்குடி தம்பதிக்கு மருத்துவ பரிசோதனை
பர்கூர் அருகே சிறுவன் கொலையான வழக்கில், அந்த சிறுவனின் பெற்றோர் என சந்தேகிக்கப்படும் தூத்துக்குடி தம்பதிக்கு டி.என்.ஏ. மருத்துவ பரிசோதனை நடந்தது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மல்லேஸ்வரன் மலை அடிவாரத்தில் கடந்த 8-ந் தேதி, 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். அவனது உடல் முழுவதும் பிரம்பால் அடிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் சமீபத்தில் ஏதேனும் சிறுவன் காணாமல் போய் உள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு தம்பதியின், மனநலம் பாதிக்கப்பட்ட மகன் சமீபத்தில் மாயமானது தெரிய வந்தது.
மேலும் அந்த சிறுவனின் அங்க அடையாளங்கள், பர்கூர் அருகே கொலை ெசய்யப்பட்டு கிடந்த சிறுவனுடன் ஒத்து போனது. இதனால் அந்த சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து தூத்துக்குடி தம்பதியை போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து சிறுவனின் உடலை அடையாளம் காட்டினார்கள். ஆனால் அவர்களால் சரியாக அடையாளம் கூற முடியவில்லை.
இதைத்தொடர்ந்து அந்த தம்பதிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுவனின் ஆடைகளில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் உடல் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது. தற்போது தனிப்படை போலீசார் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கும் விரைந்துள்ளனர்.
Related Tags :
Next Story