ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டேன் -ராகுல்காந்தி
கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியபோது ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுடன் ராகுல்காந்தி நேற்று மதியம் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் கல்லூரி மாணவிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அவற்றுக்கு பதில் அளித்து ராகுல்காந்தி கூறியதாவது:-
தமிழ் கலாசாரம்
பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 50 சதவீதம் என்பதை 60 சதவீதமாக வழங்க வேண்டும். நீதிமன்றங்கள், ஊடகம், மக்களவை, மாநிலங்களவை, சட்டசபை உள்ளிட்டவற்றை இளம்பெண்கள் அதிக அளவு ஆக்கிரமித்து அவை சுயமாக செயல்படும்படி செய்தால் ஜனநாயகம் வலுப்பெறும்.
நாட்டில் பல்வேறு கலாசாரங்கள், மொழிகள் உள்ளன. அவற்றை முழுமையாக பாதுகாக்க வேண்டும். தமிழர்கள் தமிழ் கலாசாரத்தையும் மற்றவர்கள் அவரவர்களின் கலாசாரத்தையும் பாதுகாக்க போராட வேண்டும். தமிழ் கலாசாரத்தை மதிக்கிறேன். மொழி, கலாசாரம் என எதையும் திணிக்கமாட்டேன். ஜனநாயகத்தை பாதுகாக்க கலாசாரத்துக்கு மதிப்பு அளிப்பது அவசியம். பல்வேறு சிந்தனைகளை கொண்டது தான் இந்தியா. ஒற்றை சிந்தனைக்கு இடமில்லை.
பெண்களுக்கு முழு பாதுகாப்பு
பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படும்போது அவர்கள் ஆண்களுக்கு எதிராக போராட வேண்டும். பெண்களுக்கு பெண்களால் தான் பாதுகாப்பு அளிக்க முடியும். பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
அப்போது தான் பெண்களுக்கு முழுபாதுகாப்பு கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு நிதி அதிகாரம் வழங்க வேண்டும். பெண்களிடம் பண அதிகாரம் இருந்தால் சிறப்பாக நிர்வாகம் செய்வார்கள்.
வேளாண் சட்டத்தை எதிர்ப்பது ஏன்?
இந்தியாவை 4 தொழில் நிறுவனங்கள் மட்டுமே வழி நடத்தும்போது பொதுமக்கள் எப்படி தொழில் செய்ய முடியும். விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களை பாதுகாப்பது தேசிய கடமையாக கருதுகிறேன். இவை மூலம் தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேலைவாய்ப்புக்கு முதுகெலும்பாக இருக்கும் இவற்றை முறித்துவிட்டால் வேலைவாய்ப்புகள் பறிபோகும். வங்கிகள் மூலமாக அவர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இப்போது விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எதிராக தாக்குல் நடத்தப்படுகிறது. இதனால் தான் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்க்கிறோம். கொரோனா காலகட்டத்தில் 5 சதவீத தொழில் அதிபர்களுக்கு பல லட்சம் கோடி வரிச்சலுகைகளை மத்திய அரசு வழங்கியது.
மன்னித்து விட்டேன்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை. அப்பாவை இழந்தது மிகப்பெரிய இழப்பாக இருந்தது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன்.
ராஜீவ்காந்தி இப்போதும் என் மனதில் வாழுகிறார். அவர் இறந்ததாக நான் நினைக்கவில்லை. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். கேள்வி கேட்கும் மனப்பான்மையை மாணவ-மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளிடம் எவ்வித கூச்சமும் இன்றி கேள்வி எழுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story