செங்குன்றத்தில் பரபரப்பு பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து பிளஸ்-2 மாணவர் கடத்தல்


செங்குன்றத்தில் பரபரப்பு பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து பிளஸ்-2 மாணவர் கடத்தல்
x
தினத்தந்தி 18 Feb 2021 11:56 AM IST (Updated: 18 Feb 2021 11:56 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் பிளஸ்-2 மாணவரை கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்குன்றம், 

செங்குன்றத்தை அடுத்த புள்ளி லைன் பாலாஜி கார்டன் 7-வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு ஜனனி என்ற மகளும், கணேஷ் (வயது 17) என்ற மகனும் உள்ளனர். மகள் ஜனனிக்கு திருமணமாகி விட்டது. கணேஷ் செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இதற்கிடையே நேற்று மாலை கணேஷ் பள்ளியில் பாடங்களை கவனித்து கொண்டிந்த போது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென பள்ளிக்குள் புகுந்து மாணவர் கணேசனை அடித்து இழுத்து காரில் கடத்தி சென்றனர்.

இதைக்கவனித்த சக மாணவர்கள் காரை வழிமறித்து மாணவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியாததால், காருக்குள் இருந்த கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து வெளியே இழுத்து போட்டனர். இதுகுறித்து செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தனிப்படை விரைந்தது

போலீசார் அங்கு வந்து பிடிபட்ட சந்தோஷ்குமார் (25) என்பவரிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பூபதி என்பவருக்கும், மாரியப்பன் மகள் ஜனனி என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக ஜனனி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பூபதி மாமனார் மாரியப்பனை பழிவாங்கும் நோக்கில் தனது நண்பர்களுடன் சென்று ஜனனியின் தம்பியும், தனது மைத்துனருமான கணேசை காரில் புதுக்கோட்டைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார், புதுக்கோட்டைக்கு மாணவனை மீட்க விரைந்துள்ளனர். பள்ளிக்குள் புகுந்து பள்ளி மாணவரை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story