வேலூர்; 2 டன் பிளாஸ்டிக் பொருட்களுடன் லாரி பறிமுதல்
புதுச்சேரியில் இருந்து வேலூருக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவை இறக்கப்பட்ட கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.
வேலூர்
புதுச்சேரியில் இருந்து வேலூருக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவை இறக்கப்பட்ட கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.
மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
வேலூர் மாநகராட்சி பகுதியில் காலை வேளையில் நடைபெற்று வரும் துப்புரவு, சுகாதார பணிகளை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி அவர் இன்று காலை வேலூர்-ஆற்காடு சாலை காகிதப்பட்டறை பகுதியில் நடைபெறும் துப்புரவு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் மாநகர நல அலுவலர் சித்ரசேனா, 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அப்போது காகிதப்பட்டறை டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து பிளாஸ்டிக் மூட்டைகள் இறக்கப்பட்டு, அவை ஒரு கடையில் அடுக்கி வைக்கப்பட்டன.
அதைக்கண்டு சந்தேகம் அடைந்த கமிஷனர் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது லாரியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டீ கப்புகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
விசாரணையில், புதுச்சேரியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
அதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் லாரியுடன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்ட கடைக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து லாரியில் வேலூருக்கு கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 டன்னுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த லாரியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் வேறு கடைகளுக்கு இறக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இதில், தொடர்புடைய நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அதன் பின்னர் லாரி விடுவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story