விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் போராட்டம்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் நெல், உளுந்து, மணிலா, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெல் அறுவடை தீவிரமாக உள்ளதால் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கடந்த சில வாரங்களாக நெல்வரத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில் நெல் கொள்முதலுக்கு வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கு ரூ.1,000 வரி விதிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களுக்கே நேரடியாக சென்று நெல் கொள்முதல் செய்தாலும் இந்த வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் கிராமப்புறங்களில் நெல் கொள்முதல் செய்து வரி செலுத்தாத வாகனங்களை அதிகாரிகள் சிறைபிடித்து அபராதம் விதித்துள்ளதாக தெரிகிறது.
பேச்சுவார்த்தை
இதனால் ஆத்திரமடைந்த சேலம், ஆத்தூர், ஈரோடு, சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதி வியாபாரிகள் நேற்று நெல் கொள்முதல் செய்யாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகளுக்கு எடை போடாமல் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேக்கமடைந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த கலைச்செல்வன் எம்.எல்.ஏ. நேரில் சென்று வியாபாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, தங்களது கோரிக்கை குறித்து அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாயிகள் பாதிக்காத வகையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வியாபாரிகளை கேட்டுக் கொண்டார். இதனை ஏற்ற வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story