புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு


புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 1:10 AM IST (Updated: 19 Feb 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

நாகர்கோவில்:
புத்தன் அணை குடிநீர் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். 
குறைதீர்க்கும் கூட்டம் 
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி முன்னிலை வகித்தார். வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, கால்நடைத்துறை இணை இயக்குனர் கந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தோட்டக்கலை துணை இயக்குனர் ‌ஷீலா ஜாண், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பொறுப்பு) அருள்சன் பிரைட், வேளாண்மை பொறியியல் துணை உதவி செயற்பொறியாளர் மகே‌‌ஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டமானது காலை 11 மணி முதல் 12 மணி வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, குருந்தன்கோடு மற்றும் தக்கலை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கும், 12 மணி முதல் 1 மணி வரை ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், முஞ்சிறை, மேல்புறம், திருவட்டார் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கும் நடந்தது.
ஆக்கிரமிப்புகள் 
கூட்டம் தொடங்கியதும் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாய சங்க பிரதிநிதி பத்மதாஸ் நன்றி கூறினார். அதோடு ஏற்கனவே செலுத்திய பணத்தை திருப்பி தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அதன்பிறகு கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
மாங்குழிகுளம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இரணியல் வள்ளி ஆற்றுப்பாலம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதோடு அந்த இடத்தில் வீடு கட்டப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் 30 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள 30 வீடுகளையும் அகற்ற வேண்டும்.
கல்லுக்கூட்டம், குளச்சல் பகுதியில் வயல் வெளிகள், தோப்புகளில் உள்ள தென்னை மரங்களுக்கு இடையே உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் உரிய கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட கல்லுக்கூட்டம் பேரூராட்சி, குளச்சல் நகராட்சி சார்பில் உரிய கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு
நாகர்கோவிலில் உள்ள சுப்பையார்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாம்பழத்துறையாறு அணை தண்ணீர் பாயும் கால்வாயை தூர்வார வேண்டும். 4 வழிச்சாலை திட்டத்தில் மூடப்பட்ட குளங்களுக்கு பதில் பிற குளங்களை ஆழப்படுத்த வேண்டும். புத்தன் அணை திட்டத்தில் தண்ணீர் மாநகராட்சிக்கு கொண்டு வந்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குமரி மாவட்டத்தில் விவசாயம் அழிந்துவிடும். எனவே மாற்று திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். மண்டைக்காடு கோவில் திருவிழாவுக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து 10 நாட்கள் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
குமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் கடந்த ஆண்டு சரியான முறையில் தூர வாரப்படவில்லை. எனவே இந்த ஆண்டு தூர்வாரவில்லை எனில் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் நெல் விவசாய பரப்பளவு 6 ஆயிரம் ஹெக்டராக குறைந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என்றால் சாகுபடி பரப்பளவு மேலும் குறைந்துவிடும்.
கலெக்டர் பதில் 
இதைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் பதில் அளித்து பேசுகையில், ‘‘மாங்குழிகுளத்தில் உள்ள மரங்களை விலை நிர்ணயம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்றுப்பாலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக போலீசில் புகார் தெரிவியுங்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மின் கம்பங்களை மாற்றுவது தொடர்வாக நடவடிக்கை எடுக்கப்படும். சுப்பையார்குளத்தில் ஒருபகுதி ஆக்கிரமிப்பு ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாம்பழத்துறையாறு அணை தண்ணீர் பாயும் கால்வாயை தூர்வார தற்போது சிறப்பு நிதி இல்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். புத்தன் அணை திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய் தூர்வாருவது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் விவசாய பிரதிநிதிகள் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story