சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
மதுரையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றது. அதில் நாடு தழுவிய ஆய்வுகளின்படி சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை அதிகரித்தது தெரிய வந்துள்ளது.
மதுரை,பிப்.
மதுரையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்றது. அதில் நாடு தழுவிய ஆய்வுகளின்படி சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை அதிகரித்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் கூறியதாவது:-
காலநிலை மாற்றங்கள்
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடுவதால் ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை வைத்து பூமியில் சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக, வலசை வரும் பறவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலத்திற்கு தொடர்ந்து கண்டறிவதன் மூலம் புறச்சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை கணிக்க முடியும்.
இதுபோன்ற, உலகளாவிய கணக்கெடுப்பின் மூலம் சில பறவைகளின் பரவலை எளிதாக அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக காலம் காலமாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வந்த நிலையில், அது தவறான தகவல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை பல மடங்கு பெருகி இருப்பதும், ஒரு சில இடங்களில் அருகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
பங்கேற்ற கல்லூரிகள்
பறவைகள் கணக்கெடுக்கும் நிகழ்வு இந்த ஆண்டு மதுரையில் பிப்ரவரி 12 முதல் 15-ந் தேதி வரை அமெரிக்கன் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, யாதவா கல்லூரி, மீனாட்சி கல்லூரி, சவுராஷ்டிரா கல்லூரி வளாகங்களில் நடைபெற்றது. அதில், புள்ளி ஆந்தை, பழுப்பு ஈ பிடிப்பான், வல்லூறு, செம்மார்பு குக்கறுப்பான், பனை உழவாரன், செய்முறை கொண்டை குருவி, வெள்ளை மார்பு மீன்கொத்தி, மடையான கொக்கு, பச்சை பஞ்சுருட்டான், சாம்பல் நாரை உள்ளிட்ட 36 வகையான பறவை சிற்றினங்கள் காணப்பட்டன.
இந்த கணக்கெடுப்பில் மீனாட்சி கல்லூரி முனைவர் ஜோதிசாம், யாதவர் கல்லூரி சார்பில் துறைத்தலைவர் மதியழகன், பேராசிரியர் ராஜ் குமார், வெள்ளைச் சாமி நாடார் கல்லூரி துறை தலைவர் மலர், சவுராஷ்டிரா கல்லூரி துறை தலைவர் சர்மிளா, பேராசிரியர் செல்வி ஆகியோர் வழிகாட்டலில் மாணவ மாணவியர் பறவை கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story