கழிவறைக்குள் 1 மணி நேரம் பரிதவித்த இளம்பெண்
மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் நகராட்சி ஊழியரின் அலட்சியத்தால் கழிவறைக்குள் சிக்கிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
குழித்துறை:
மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் நகராட்சி ஊழியரின் அலட்சியத்தால் கழிவறைக்குள் சிக்கிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச கழிவறை
மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் பயணிகளுக்காக ஒரு கட்டண கழிப்பிடம் உள்ளது. அதுபோல் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நிற்கும் இடத்தில் ஒரு இலவச கழிவறையும் உள்ளது.
இந்த கழிப்பறையையும் குழித்துறை நகராட்சி ஊழியர்கள் தினமும் காலையில் சென்று திறந்து, மாலையில் பூட்ட வேண்டும். ஆனால், நகராட்சி ஊழியர்கள் முறையாக பராமரிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஒரு இளம்பெண் தனது உறவினர்களுடன் ஊருக்கு செல்வதற்காக அரசு விரைவு பஸ்கள் நிற்கும் பகுதிக்கு வந்தார். பின்னர், அந்த இளம்பெண் அங்குள்ள இலவச கழிவறைக்கு சென்றார்.
கதவை பூட்டி சென்றார்
இந்தநிலையில், கழிவறைக்கு சென்ற இளம்பெண் வெகுநேரமாகியும் வராததால் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். கடைசியாக அவர்கள் இலவச கழிவறையின் அருகில் சென்றனர். அப்போது, பூட்டப்பட்ட கழிவறைக்குள் இருந்து இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அதிர்ந்து போனார்கள். அப்போது தான், அந்த இளம்பெண் நடந்தவற்றை கூறினார்.
இளம்பெண் கழிவறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் அங்கு வந்த நகராட்சி ஊழியர் உள்ளே, இளம்பெண் இருப்பதை கவனிக்காமல் கழிவறையை பூட்டி சென்று விட்டார்.
ஊழியரின் அலட்சியம்
பின்னர், அந்த இளம்பெண் வெளியே வருவதற்காக கழிவறையின் கதவை திறந்த போது வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். கதவை பலமுறை தட்டியும் ஆள் நடமாட்டம் இல்லாததால் யாரும் உதவிக்கு வரவில்லை.
உடனே, இதுபற்றி அவர்கள் குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். நகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து கழிவறையின் கதவை திறந்தனர். அதன்பிறகு அந்தப் பெண் வெளியே வந்தார்.
நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் சுமார் 1 மணிநேரம் கழிவறைக்குள் இளம்பெண் சிக்கிய சம்பவம் மார்த்தாண்டம் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story