தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை
நிலத்தகராறில் அங்கன்வாடி பெண் ஊழியரை கொலை செய்த வழக்கில் தந்தை- மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா கொசப்பாடி காலனியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மனைவி தனபாக்கியம் (வயது 57).
திருமணமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த தனபாக்கியம், மூரார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (50) குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக தனபாக்கியம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன்பேரில் அந்த வழக்கில் தனபாக்கியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அர்ஜூனன் குடும்பத்தினர், தனபாக்கியத்தை கொலை செய்ய திட்டம் தீட்டினர். கடந்த 7.2.2012 அன்று தனபாக்கியம், பணியை முடித்துக்கொண்டு மூரார்பாளையத்தில் இருந்து பஸ்சில் புறப்பட்டு கொசப்பாடிக்கு வந்து இறங்கி அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அர்ஜூனன், அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன் (28), லட்சுமிகுமார் (26), சிவராமன் (24), உறவினர் முத்து (65) ஆகியோர் தனபாக்கியத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ஜூனன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், முத்து ஆகியோர் உடல்நலக்குறைவால் இறந்தனர்.
இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட அர்ஜூனன், அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், லட்சுமிகுமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.
Related Tags :
Next Story