ஈரோடு காசியண்ண வீதியில் சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோடு காசியண்ண வீதியில் சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி 2-ம் மண்டலத்துக்கு உள்பட்ட காசியண்ண வீதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள், இரு சக்கர வாகன பழுது நீக்கும் பட்டறைகள் போன்றவை உள்ளன. ஈரோடு முனிசிபல் காலனி, பாப்பாத்திக்காடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கால்வாய் வாசுகி வீதி, காசியண்ண வீதி வழியாக செல்கிறது.
இந்த நிலையில் சாக்கடை கால்வாய் கடந்த 6 மாதங்களாக தூர்வாரப்படாததை கண்டித்து காசியண்ண வீதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு சின்னமார்க்கெட் முன்பு உள்ள நாச்சியப்பா வீதி ரோட்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சவிதா சிக்னல் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் வரிசையில் நின்றன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் மற்றும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த 6 மாதங்களாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால், பிளாஸ்டிக் குப்பைகள், மது பாட்டில்கள் போன்றவை சாக்கடைகளில் தேங்கி, அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் பாதாள சாக்கடை இணைப்பும் எங்கள் பகுதியில் இன்னும் கொடுக்கப்படவில்லை. எனவே மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் உடனடியாக சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாவறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு போலீசார், ‘உங்கள் பகுதி பிரச்சினை குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் தெரிவியுங்கள், அதை விடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவார்கள்’ என்றனர்.
இதற்கிடையில் அந்த வழியாக வந்த கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. வாகனத்தை வழிமறித்து, பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ., காசியண்ண வீதிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் சாக்கடையை முறையாக தூர்வாரி உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் நாச்சியப்பா வீதி ரோட்டில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story