வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்


வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2021 2:54 AM IST (Updated: 19 Feb 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டத்தை 2-ஆக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கக்கோரி விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். வக்கீல் அம்பேத்கர் தலைமையில் பூமாலை குமாரசாமி, பட்டி முருகன், தங்க.தனவேல், சிவாஜிசிங், ஸ்டீபன், புஷ்பதேவன், சிவக்குமார், ரவி உள்பட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சாலையோரம் ஒருவரையொருவர் கைகளை கோர்த்தபடி நீண்டவரிசையில் நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாளை கடையடைப்பு

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) விருத்தாசலத்தில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்களும் ஆதரவு தரவேண்டும்.  எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கும் வரை நாங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறி எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story