டி.என்.பாளையம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை- மாமனார்-மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்


டி.என்.பாளையம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை- மாமனார்-மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
x
தினத்தந்தி 19 Feb 2021 3:41 AM IST (Updated: 19 Feb 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே மாமனார், மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

டி.என்.பாளையம்,
 டி.என்.பாளையம் அருகே மாமனார், மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மாமியார், மாமனாருடன் தகராறு
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. அவருடைய மனைவி சாந்தாமணி. இவர்களுடைய மகன் வீரக்குமார் (வயது 38). விவசாயி. இவருக்கும், கள்ளிப்பட்டியை சேர்ந்த ரேவதி என்கிற காளீஸ்வரி (28) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு         திருமணம் நடந்தது.       இவர்களுக்கு  பூர்வி (4), ஹிவாணி (2) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சாந்தாமணியும், ஈஸ்வரமூர்த்தியும் தனது மகனுடன் வசித்து வருகின்றனர்.  ரேவதிக்கும், அவரது மாமியார், மாமனாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரேவதி மனம் உடைந்து காணப்பட்டு் வந்தார்.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ரேவதி இருந்த அறையின் கதவு வெகுநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் உறவினர்கள் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.  அங்கு ரேவதி உத்தரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனே இதுபற்றி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் நடந்து 5 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்

Next Story