ஈரோடு விளையாட்டு விடுதியில் போலி ரசீது தயாரித்து ரூ.17 லட்சம் மோசடி; மேலாளர் பணி இடைநீக்கம்
ஈரோடு விளையாட்டு விடுதியில் போலி ரசீது தயாரித்து ரூ.17 லட்சம் மோசடி செய்த விடுதி மேலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோடு
ஈரோடு விளையாட்டு விடுதியில் போலி ரசீது தயாரித்து ரூ.17 லட்சம் மோசடி செய்த விடுதி மேலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
போலி ரசீது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பிரிவு மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதியின் ஆண்டு வரவு, செலவு கணக்கு தொடர்பாக அரசு ஆடிட்டர்கள் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் போலி ரசீதுகள் தயாரித்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கேர் டேக்கர் எனப்படும் பதவியில் பணியாற்றி வந்தவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த பிறகும் அவர்களின் பெயரில் கையெழுத்திட்டு சம்பள பணத்தை எடுத்து வந்ததும் தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த விவரங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது.
ரூ.17 லட்சம் மோசடி
சுமார் ரூ.17 லட்சம் வரை இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை முதன்மை கணக்கு அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் நேரில் விசாரணை நடத்தி கோப்புகளை ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் ஈரோடு மாணவிகள் விளையாட்டு விடுதியின் மேலாளர் சாந்தியை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேற்று முன்தினம் உத்தரவிட்டு உள்ளார். மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார் விடுதி மேலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story