கடனை திருப்பி செலுத்தக்கூறி நெருக்கடி கொடுத்ததால் கோவிலுக்குள் தூக்குப்போட்டு பூசாரி தற்கொலை
தம்மம்பட்டியில் கடனை திருப்பி செலுத்தக்கூறி நெருக்கடி கொடுத்ததால், கோவிலுக்குள் தூக்குப்போட்டு பூசாரி தற்கொலை செய்து கொண்டார். மேலும் போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தம்மம்பட்டி,
தம்மம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள சுப்ரமணியசாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தவர் நிர்மல் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த இவர் ஆத்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வாகனத்திற்கான கடன் தொகையை சில மாதங்களாக திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குரிய பணத்தை திரும்ப செலுத்த சொல்லி தனியார் நிதி நிறுவனத்தினர் நிர்மலுக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் நிர்மல் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு அவர், பூசாரியாக பணியாற்றி வந்த கோவிலின் கதவை அடைத்து விட்டு, கோவிலுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
உடல் எரிப்பு
இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் கோவில் கதவு திறக்கப்படாததால் கோவில் நிர்வாகிகள், கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு நிர்மல் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், பூசாரி நிர்மலின் உடலை, அவசர அவசரமாக தம்மம்பட்டி கடைவீதியில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. பின்னர் அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீவிர விசாரணை
இதனிடையே சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமாருக்கு இது குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர் உத்தரவின் பேரில் தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story