செங்குன்றம் அருகே பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவர் 3 மணிநேரத்தில் மீட்பு


செங்குன்றம் அருகே பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவர் 3 மணிநேரத்தில் மீட்பு
x
தினத்தந்தி 19 Feb 2021 9:37 AM IST (Updated: 19 Feb 2021 9:37 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவர், 3 மணிநேரத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம், 

செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் பாலாஜி கார்டன் 7-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் கணேஷ் (வயது 17). இவர், செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து வகுப்பறையில் இருந்த கணேசை அடித்து உதைத்து காரில் கடத்திச்சென்றனர்.

மாமனாரை பழிவாங்க

அப்போது காரில் இருந்த கடத்தல் கும்பலில் ஒருவரான சந்தோஷ்குமார்(25) என்பவரை மட்டும் சகமாணவர்கள் மடக்கி பிடித்து செங்குன்றம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், புதுக்கோட்டையை சேர்ந்த பூபதி(26) என்பவருக்கும், மாரியப்பனின் மகள் ஜனனிக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சினையில் ஜனனி, பூபதியிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பூபதி, தனது மாமனார் மாரியப்பனை பழிவாங்கும் நோக்கத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவி ஜனனியின் தம்பியும், தனது மைத்துனருமான கணேசை காரில் புதுக்கோட்டைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

3 மணிநேரத்தில் மீட்பு

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன், பள்ளி மாணவரை கடத்தி வந்த காரை மடக்கி பிடித்து கணேசை பத்திரமாக மீட்டார்.

மாணவரை கடத்தியதாக பூபதி, அவரது நண்பர்களான மணிகண்டன் (24), சீனிவாசன் (25), ஆதித்ய நடராஜ் (25), சக்திவேல் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது செங்குன்றம் போலீசார் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட மாணவர் கணேசை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story