தொகுப்பு வீடுகள் கட்டித்தர கோரி மலையடிவாரத்தில் குடியேறிய மக்கள்


தொகுப்பு வீடுகள் கட்டித்தர கோரி மலையடிவாரத்தில் குடியேறிய மக்கள்
x
தினத்தந்தி 19 Feb 2021 5:34 PM IST (Updated: 19 Feb 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே தொகுப்பு வீடுகள் கட்டித்தர கோரி பொதுமக்கள் மலையடிவாரத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி :


தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோத்தலூத்து ஊராட்சிக்கு உட்பட்ட மணியாரம்பட்டி கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

 இவர்களுக்கு கடந்த 40 வருடங்களுக்கு முன்பு அரசு சார்பில் 31 தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது. தற்போது அந்த வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. 


மேலும் வசிப்பவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்ட நிலையில் ஒரு வீட்டில் 2-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


இதனால் தங்களுக்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். 

மேலும் தொகுப்பு வீடுகள் கட்டி தருவதற்கான இடங்களையும் கிராம மக்கள் பார்த்து தெரிவித்தனர். ஆனால் மணியாரம்பட்டி கிராம மக்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்க அரசு முன்வர வில்லை. 


குடிசை அமைத்தனர்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று ஆண்டிப்பட்டி-ஏத்தக்கோவில் சாலையில் உள்ள லக்கலகரடு மலையடிவாரத்தில், குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அவர்கள், மேக்கிழார்பட்டி அருகே உள்ள அரசு நிலத்தில் பட்டா கொடுத்து தொகுப்பு வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

 இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story