கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் பெண்கள் திடீர் போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் பெண்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 19 Feb 2021 7:38 PM IST (Updated: 19 Feb 2021 7:38 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் பெண்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரபரப்பு புகார் தெரிவித்தனர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் பெண்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரபரப்பு புகார் தெரிவித்தனர்.
பெண்கள் போராட்டம்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மேல பெருவிளையை சேர்ந்தவர் மரிய ரோஸ்லின் (வயது 50). இவர் நேற்று தன் பேத்தி லியா, உறவினர் கலா மற்றும் சிலருடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மரிய ரோஸ்லின் கையில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது. மேலும் அவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாகவும் கூறினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கதறி அழுதார்
இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து அவர்கள் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். அதன்பிறகு மரிய ரோஸ்லினிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கண்ணீர்விட்டு அழுதபடி ஒரு மனுவை போலீசாரிடம் அவர் அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கந்துவட்டி கும்பல்
தொழில் செய்வதற்காக எனது மகன் பெலிக்ஸ் பிரபு வீட்டை அடகு வைத்து பணம் வாங்கியிருந்தார். பின்னர் அந்த கடனை திருப்பி செலுத்துவதற்காக சென்றார். ஆனால் அப்போது வீடு தங்களுக்கு சொந்தமானது என்று பணம் கொடுத்த கந்துவட்டி கும்பல் கூறுகிறது.
இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். இதை தொடர்ந்து இதுதொடர்பாக என் மகன், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேறு வழியில்லை 
அதே சமயம், எனது வீட்டை அபகரித்த கந்துவட்டி கும்பல் கொடுத்த புகார் தொடர்பாக எங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் நாங்கள் மிகுந்த மன வேதனையிலும், உயிர் பயத்திலும் உள்ளோம். எனவே எங்கள் வீட்டை மீட்டு தருவதுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லை எனில் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று அளிக்கும்படி போலீசார் கூறினர். அதன்பேரில் மரிய ரோஸ்லினும், அவருடன் வந்த லியா, கலா மற்றும் உறவுக்கார பெண்கள் சென்று மனு அளித்தனர். அதன் பிறகு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து அங்கு நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Next Story