கேரளாவில் இருந்து ஆட்டோவில் கடத்திய 2¼ கிலோ கஞ்சா பறிமுதல்
கேரளாவில் இருந்து ஆட்டோவில் கடத்தி வந்த 2¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர் உள்பட 2 பேர்களை கைது செய்தனர்.
குழித்துறை:
கேரளாவில் இருந்து ஆட்டோவில் கடத்தி வந்த 2¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர் உள்பட 2 பேர்களை கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் மார்த்தாண்டம் வெட்டுமணி மேம்பாலத்தின் தொடக்க பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குழித்துறையில் இருந்து வேகமாக ஒரு ஆட்டோ வந்தது. மேம்பால பகுதியின் கீழே வந்தபோது அதை போலீசார் கையால் சைகை காட்டி நிறுத்த கூறினார்கள். ஆனால் டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார்.
உடனே போலீசார் பின்தொடர்ந்து சென்று ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை போட்டனர். அப்போது பின் இருக்கையின் அடியில் ஒரு காகித பொட்டலத்தில் 2¼ கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
ஆட்டோவில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தினார். அப்போது ஆட்டோவை ஓட்டியவர் குழித்துறை களுவன்திட்டையை சேர்ந்த விஜு (வயது 39) என்பதும், உடன் இருந்தவர் அதே பகுதியை சேர்ந்த மது (51) என்பதும் தெரியவந்தது.
அவர்கள் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, அதிக விலைக்கு விற்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story