கணவரின் சகோதரரிடம் ஏற்பட்ட பிரச்சினையால் தீக்குளிக்க முயன்ற பெண் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கணவரின் சகோதரரிடம் ஏற்பட்ட பிரச்சினையால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
கணவரின் சகோதரரிடம் ஏற்பட்ட பிரச்சினையால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் 30 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் வந்தார். அவர் தனது கையில் பை ஒன்றை வைத்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவுவாசல் முன்பு நின்று கொண்டிருந்த அவர் திடீரென்று தான் கொண்டு வந்த பையில் இருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்து ஓடிச்சென்று அவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
விசாரணை
உடனடியாக குடத்தில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அந்த பெண் மீது ஊற்றப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் கலெக்டர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) மகேஷ்வரன் அங்கு வந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் காங்கேயம் தாலுகா நிழலி பகுதியை சேர்ந்த அமுதவல்லி (வயது 30) என்றும், அமுதவல்லியின் கணவரின் சகோதரருடன் குடும்ப பிரச்சினை இருப்பதாகவும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு பின்னர் காங்கேயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டும், இதுவரை கைது செய்யவில்லை என்பது தெரியவந்தது. எனவே உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தீக்குளிக்க முயன்றதாக அமுதவல்லி தெரிவித்தார்.
ஆலோசனை
இதைத்தொடர்ந்து அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் வீரபாண்டி போலீசாரிடம் அமுதவல்லி ஒப்படைக்கப்பட்டார். வழக்கு விசாரணை காங்கேயம் போலீஸ் நிலையத்தில் நடைபெறுவதால் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அமுதவல்லியை போலீசார் அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story