நீலகிரி போலீஸ் சூப்பிரண்டாக பாண்டியராஜன் பொறுப்பேற்பு


போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன்
x
போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன்
தினத்தந்தி 19 Feb 2021 9:16 PM IST (Updated: 19 Feb 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பாண்டியராஜன் பொறுப் பேற்றார். ஊட்டியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண முன்னுரிமை அளிக்கப்படும் என்று பேட்டி அளித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சசிமோகன் சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை வணிக குற்ற புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டார். 

இதையடுத்து அவர் ஊட்டியில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பாண்டியராஜன் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார்.   
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

நீலகிரி மாவட்டம் கோடை வாசஸ்தலமாக உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 50 நாட்கள் இங்கு பணிபுரிந்து உள்ளேன். 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று போலீசில் பணியில் சேர்ந்தேன். கோவை, கரூரில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ளேன். 

ஊட்டியில் வருகிற ஏப்ரல் மாதம் கோடை சீசன் வர உள்ளது. சட்டமன்ற தேர்தலும் நடக்க இருக்கிறது. சீசனில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண முன்னுரிமை அளிக்கப்படும். 

குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்களை தொடர்ந்து இயக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். 

கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். ஆட்டோ டிரைவர்களால் போக்குவரத்துக்கு இடையூறு, விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். 

Next Story