காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்
போலீஸ் அதிகாரிகளை விமர்சித்து பேசி சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்ட சம்பவம் தொடர்பாக காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சிதம்பரம்-திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க, இடம் கையகப்படுத்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் வீடுகளை இடிக்க வந்தனர். அப்போது அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி பாசன விவசாய சங்க தலைவர் இளங்கீரனை, காட்டுமன்னார்கோவில் போலீசார் தாக்கி, கைது செய்தனர்.
இதற்கிடையே காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா, வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், எந்தவொரு ஆர்ப்பாட்டம் நடந்தாலும் உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தனிப்பிரிவு போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் உத்தரவிடுவார்கள். ஆனால் இன்று காட்டுமன்னார்கோவில் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை கண்டித்து, 3 மணி நேரம் போராட்டம் நடந்துள்ளது.
இடமாற்றம்
ஆனால் அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிய கோரி தனிப்பிரிவு போலீசாரோ அல்லது உயர் அதிகாரிகளோ உத்தரவிடவில்லை. இதுபோன்று செயல்பட்டால் எப்படி, காவல்துறையில் பணியாற்ற முடியும் என்று உயர் அதிகாரிகளையும், சக அதிகாரிகளையும் விமர்சித்து பேசியிருந்தார். இந்த ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலீஸ் அதிகாரிகளை விமர்சித்து பேசிய காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா நேற்று கடலூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story