அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின்  14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 19 Feb 2021 10:24 PM IST (Updated: 19 Feb 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்று உடுமலையில் நடந்த சி.ஐ.டி.யு.அரசு போக்குவரத்து கழக மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடுமலை,
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்று உடுமலையில் நடந்த சி.ஐ.டி.யு.அரசு போக்குவரத்து கழக மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மண்டல மாநாடு
சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 3-வது மண்டல மாநாடு உடுமலை நகராட்சி திருமணமண்டபம் தேஜஸ்மஹாலில்  நடந்தது. மாநாட்டிற்கு சங்க மண்டல தலைவர் எம்.கந்தசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.ஜெகதீசன் வரவேற்று பேசினார். மாநாட்டை அரசு போக்குவரத்து சம்மேளன துணை பொது செயலாளர் டி.ஜான்கென்னடி தொடங்கிவைத்து பேசினார். மண்டல பொது செயலாளர் பி.செல்லத்துரை வேலை அறிக்கையை படித்தார். பொருளாளர் என்.சுப்ரமணி வரவு-செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். 
மாநாட்டில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணை பொது செயலாளர் பி.செல்வராஜன், சம்மேளன பன்முக தலைவர் என்.முருகையா ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொது செயலாளர் கே.ஆறுமுகநயினார் நிறைவுரையாற்றினார். மண்டல துணை பொது செயலாளர் வி.விஸ்வநாதன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
மாநாட்டில் மோட்டார் வாகன சட்ட விதிகளில் கூடுதலாக இணைத்துள்ள 288 (ஏ) சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். ஊதிய ஒப்பந்தப்படி இன்சென்டிவ், கலெக்சன் பேட்டா மற்றும் பிற அலவன்சுகள் வழங்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு, கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வது, தேவையான பணியாளர்களை நியமிக்க கேட்டுக்கொள்வது, பணிமனை ஊழியர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கும்படி கேட்டுக்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.
வேலை நிறுத்தம் 
மாநாட்டில் கலந்து கொண்ட அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொது செயலாளர் ஆறுமுகநயினார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் போக்குவரத்து துறைக்கு நிதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவை உள்ளது. ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை நிலுவை உள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை கொண்டுதான் போக்குவரத்துக்கழகம் இயங்கி வருகிறது. அரசு நிதி எதுவும் கொடுப்பதில்லை. அரசு நிதி கொடுக்க வேண்டும். போக்குவரத்துத்துறையை மேம்படுத்த வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை கடந்த 19 மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு முனைப்பு காட்டவில்லை. இப்போது நடந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு காணப்படவில்லை. வருகிற 23-ந் தேதிக்குள் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்  கூறினார்.  

Next Story