நாகூரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் நாகூரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நாகை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
நாகூர்:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் நாகூரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நாகை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
சுற்றித்திரிந்த மாடுகள்
நாகை-நாகூர் சாலையில் வடக்கு பால் பண்ணைச்சேரி உள்ளது. இந்த சாலை வழியாக நாகூர், நாகை, காரைக்கால், கும்பகோணம், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை மக்கள் பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்து வந்தன. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே படுத்து இருப்பது தெரியாமல் மோதி விபத்து ஏற்படுகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பிடிக்கப்பட்டன
இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 18-ந் தேதி செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், நாகூரில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் நாகூர்-நாகை சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து நாகை புதிய பஸ் நிலையத்தில் கட்டி வைத்தனர். இதை தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story