மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. இதையடுத்து பருவகாலங்களுக்கு ஏற்ப நீர்மட்டம் நிர்ணயம் செய்யப்படும் என்று அதன் தலைவர் குல்சன்ராஜ் தெரிவித்தார்.
தேனி
தமிழக-கேரள மாநில எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது.
இந்த அணையின் நீர்மட்டம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணிக்கவும், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்யவும் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் நேரில் ஆய்வு செய்தனர்.
ஓராண்டு இடைவெளிக்கு பிறகு 14-வது முறையாக நேற்று கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் குல்சன்ராஜ், கேரள பிரதிநிதியான கேரள நீர்வள ஆதார அமைப்பு தலைமை செயலாளர் டி.கே.ஜோஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில் துணை கண்காணிப்பு குழு தலைவர் சரவணக்குமார், துணை கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக மற்றும் கேரள மாநில பிரதிநிதிகள் மற்றும் இருமாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மூவர் கண்காணிப்பு குழுவின் தமிழக அரசு பிரதிநிதியான தமிழக பொதுப்பணித்துறை அரசு செயலர் மணிவாசகம் இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை.
‘ரூல் கர்வ்’ அட்டவணை
ஆய்வுக்காக கண்காணிப்பு குழுவினர் மற்றும் இருமாநில அதிகாரிகள் தேக்கடியில் இருந்து படகுகள் மூலம் அணைக்கு சென்றனர்.
அங்கு முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, அணையின் சுரங்கப் பகுதிகள், மதகுகள் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அணைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் அந்த பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடந்தது.
பின்னர் கண்காணிப்பு குழுவினர் குமுளிக்கு திரும்பி வந்தனர். அங்கு ஆய்வுக்கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தின்போது, அணையை ஆய்வு செய்ததில் அணையின் கட்டமைப்பில் தொடங்கி பிரதான அணை, பேபி அணை, சுரங்க பகுதிகள் ஆகிய அனைத்தும் பலமாகவும், உறுதியாகவும், முழு திருப்திகரமாகவும் உள்ளதாக கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் கூறும்போது, சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி பருவ காலங்களுக்கு ஏற்றவாறு அணையில் நீர்மட்டத்தை நிர்ணயம் செய்யும் 'ரூல் கர்வ்' என்ற அட்டவணை முறையை செயல்படுத்த தமிழக அரசுடன் ஆலோசித்து மத்திய நீர்வள ஆணையம் முடிவு செய்துள்ளது. அணையின் நீர்வரத்து குறித்த முன்னறிவிப்பு முறை வருங்காலங்களில் பின்பற்றப்படும் என்றார்.
திட்ட மதிப்பீடு
மேலும், அணையில் நில அதிர்வுகளை பதிவு செய்யும் ‘சீஸ்மோ மீட்டர்' மற்றும் ‘அக்ஸிலரோமீட்டர்' நிறுவுதல், அணையில் இதுவரை முடங்கியுள்ள திட்டங்களை செயல்படுத்த திட்ட மதிப்பீடு தயாரித்தல் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.
பேபி அணையின் பாதுகாப்புக்காகவும், அணையை பலப்படுத்தும் வகையிலும் சுற்றிலும் உள்ள மரங்களை வெட்டுவது, அணைப்பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போலீஸ் தகவல் பரிமாற்ற அறை, சூரிய ஒளி மின்சார கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணைக்கு 20 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் வழங்கியது கண்காணிப்பு குழுவுக்கு முழு திருப்தி அளிப்பதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story