வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


வாலிபரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 19 Feb 2021 10:43 PM IST (Updated: 19 Feb 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தாக்கிய சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

மதுரை, பிப்.
வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல்
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 34), கொரோனா தடுப்பு முன்கள பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் வெளியூர் சென்று விட்டு காரில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாலம் அருகே வந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் காரை தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் திருப்பதி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரையும் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு திருப்பதியை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
உத்தரவு
இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அமைப்பினர் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கிடையில் திருப்பதியை தாக்கியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரை ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வந்தது. அதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதியை தாக்கியது தெரியவந்தது. இந்த நிலையில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story