கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும்


கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கை கொடுத்த போது எடுத்த படம்
x
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கை கொடுத்த போது எடுத்த படம்
தினத்தந்தி 19 Feb 2021 10:47 PM IST (Updated: 19 Feb 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்

கோவை

வருகிற சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்


உங்கள் தொகுதியில் ஸ்டாலின்


கோவை மாநகர் கிழக்கு மாவட்ட, கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல்பிரசார பொதுக்கூட்டம் கோவை பீளமேடு கொடிசியா அருகில் உள்ள மைதானத்தில் நேற்றுக்காலை நடந்தது. 
மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. (மாநகர் கிழக்கு), பையா கவுண்டர் (மாநகர் மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்ததும் பொதுமக்களை பார்த்து கையசைத்தார். பின்னர் மேடையில் இருந்து இறங்கி நிகழ்ச்சி நடந்த அரங்கின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் கைகுலுக்கினார்.

 சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது சிலர் அவரிடம் மனுக்களை அளித்தனர். அவற்றை அவர் வாங்கிக் கொண்டார்.

அதன்பின்னர் மேடைக்கு அவர் வந்தார். அப்போது மேடையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்த மனுக்கள் சிலவற்றை எடுத்து அதை எழுதியவர்களை அழைத்து பேசினார்.

இதைத் தொடர்ந்து கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் எழுந்து தங்கள் குறைகளை எடுத்துக் கூறினார்கள். அதன் பின்னர் மனுக்கள் உள்ள பெட்டியை மு.க.ஸ்டாலின் பூட்டி சீல் வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

மக்கள் பிரச்சினை

கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களை இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. அதனால் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளி வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டார். 

இந்த செய்தி கேட்டு நான் மிகவும் வேதனை அடைந்தேன். இன்னும் 3 மாதத்தில் ஆட்சிக்கு வர போகிறோம். மக்கள் பிரச்சினை அனைத்துக்கும் தீர்வு காண்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அந்தஸ்து கோவைக்கு கிடைத்தது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான போக்கு காரணமாக இன்று தொழில் வளம் அழிவை நோக்கி செல்கிறது.

அ.தி.மு.க. அரசு செய்யத் தவறிய கடமையை தி.மு.க. அரசு நிச்சயம் செய்து கொடுக்கும்.

வாக்குறுதி

தமிழக மக்களுக்காக நான் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறேன். அ.தி.மு.க. அரசால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை 100 நாளில் தீர்த்து வைப்பேன் என்பது தான் நான் அளித்திருக்கும் வாக்குறுதி. என்னை நம்பி நீங்கள் எல்லாம் மனுக்களை கொடுத்திருக்கிறீர்கள். இன்னும் 3 மாதத்தில் நடக்க இருக்கிற சட்டமன்ற தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. 

தமிழகம் முழுவதும் மக்களிடமிருந்து வாங்கும் மனுக்களுக்கு தீர்வு காண தனி துறை உருவாக்கப்படும். அந்த துறை மாவட்ட வாரியாக இந்த மனுக்களை பிரித்து பரிசீலித்து அதை உடனடியாக நிறைவேற்றி தருகிற வாக்குறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன். 


இந்த கடமையை தி.மு.க. அரசு நிறைவேற்றுகிற நேரத்தில் தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பத்தினரின் கோரிக்கையாவது நிறைவேற்றப்பட்டிருக்கும். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கவலைகள், துன்பங்களிலிருந்து நிச்சயமாக மீண்டிருப்பார்கள். இது பேரறிஞர் அண்ணா மீது ஆணையாக, தலைவர் கலைஞர் மீது ஆணையாக நான் உறுதி அளிக்கிறேன்.

தகவல் அறியும் உரிமை சட்டம்

இப்போது தமிழகத்தில் ஒரு அரசாங்கம் இருக்கிறது. அது அரசாங்கமே இல்லை. சில ஊழல்வாதிகள் சேர்ந்து ஊழல் கோட்டையை உருவாக்கி இருக்கிறார்கள். 

இதில் முக்கியமானவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான்.உள்ளாட்சி துறையில் நடந்து கொண்டிருக்கும் ஊழல் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டேனியல் ஜேசுதாஸ் என்பவர் சில தகவல்களை வாங்கியிருக்கிறார்.

சுண்ணாம்பு பவுடர் பாக்கெட் தனியார் கடையில் நாம் வாங்கினால் ரூ.170-க்கு கிடைக்கும். ஆனால் 840 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். 20 ரூபாய் மதிப்புள்ள பினாயில் பாட்டில் 130 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

 130 ரூபாய் மதிப்புள்ள சாக்கடை கால்வாய் அடைப்பு நீக்கும் குச்சியை ஆயிரத்து 10 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள மின் மோட்டாரை 25 ஆயிரத்து 465 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். ஆயிரத்து 112 ரூபாய் மதிப்புள்ள காப்பர் வயரை 8 ஆயிரத்து 429 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். 

820 ரூபாய் மதிப்புள்ள லைட் பிட்டிங்கை 2 ஆயிரத்து 80 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இப்படி வாங்கியதில் ஒரு ஊராட்சியில் ஒரு கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500 ஊராட்சிகளில் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அரசு பணத்தை சுருட்டியிருக்கிறார்கள். 

வலுவான ஆதாரம் 

சில நாட்களுக்கு முன்பு 123 பேருக்கு அவர் இலவச திருமணம் நடத்தி வைத்தார். அதில் பேசும்போது எடப்பாடி பழனிசாமியை வாழும் காமராஜர் என்று வேலுமணி பேசியிருக்கிறார். இதை விட பெரிய அவமானம் காமராஜருக்கு இருக்க முடியுமா

அமைச்சரின் குடும்பத்தினர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 


எஸ்.பி.வேலுமணியின் குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனத்தின் வருவாய் தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. 

அவருக்கும் சில நிறுவனங்களுக்குமான தொடர்பு பற்றிய வலுவான ஆதாரங்கள் இருக்கிறது. தி.மு.க. அரசு அமைந்ததும், அமைச்சர் வேலுமணி மீது நிச்சயமாக அது தொடர்பான வழக்கு பாயும்.

கொங்கு மண்டலத்தில் வெற்றி


இந்த ஊழல் பற்றி பேசிய தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். எவ்வளவு நாளுக்கு தான் உங்கள் அராஜகம் நடக்கும். உங்கள் அராஜகம் முடியும் நாள் நெருங்கி விட்டது.

ஊழல் செய்து விட்டு போலீசை விட்டு மிரட்டி விட்டு கடைசியாக பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு ஓட்டுக்காக கொடுப்பது கேவலமாக இல்லையா?ஆட்சி மாறும். அன்று காட்சியும் மாறும். 

கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே அந்த கோட்டையில் ஓட்டை விழுந்து விட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. 

கலைஞரின் கடைசி  ஆசை
நமது வெற்றியை கலைஞர் சமாதியில் சமர்ப்பிப்போம். மறந்து விடாதீர்கள். கலைஞரின் கடைசி ஆசை என்ன?. ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பது தான் அவரது கடைசி ஆசை.  தாழ்த்தப்பட்ட சமுதாயம், பிறப்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு பல நன்மைகளை செய்த கலைஞருக்கு 6 அடி இடம் கிடைக்கவில்லை. கொடுக்க முடியாது என்று மறுத்தார்கள். அதை எதிர்த்து போராடி, வாதாடி வெற்றி பெற்று அதற்கு பிறகு அண்ணாவுக்கு அருகில் கலைஞரை ஓய்வெடுக்க வைத்திருக்கிறோம். 

இந்த நாட்டுக்காக,  எத்தனையோ தியாகங்களை செய்தவர், 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர், நாட்டின் பிரதமர்களை உருவாக்கி தந்த கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.



Next Story