விழுப்புரம் மாவட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் - ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்


விழுப்புரம் மாவட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் - ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Feb 2021 11:21 PM IST (Updated: 19 Feb 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டக்குழு தலைவரும், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு இணை தலைவரும் ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் முன்னிலை வகித்தார். 

இதில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, வன அலுவலர் அபிஷேக்தோமர், செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில், மத்திய அரசால் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், பிரதான் மந்திரி குடியிருப்பு திட்டம், சாலைகள் திட்டம், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி பாசன மேம்பாட்டு திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதன் முன்னேற்ற பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் எம்.பி.க்கள் துரைரவிக்குமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர் கேட்டறிந்தனர்.

கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த எம்.பி.க்கள் துரை ரவிக்குமார், விஷ்ணுபிரசாத் ஆகியோர், நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 50 சதவீத வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை. 

தனியார் தண்ணீர் நிறுவனங்களில் 31 நிறுவனங்களின் தண்ணீர் பாதுகாப்பானதல்ல என்று கண்டறியப்பட்டு அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்து அறிக்கை அளிக்குபடி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக புற்றுநோய் அதிகம் பாதித்த மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறையை கேட்டுக்கொண்டுள்ளோம். 

பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டில் 80 சதவீத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டதால் இறப்பு விழுக்காடு ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்றனர்.

Next Story