தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்
தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம்
திருப்பூர்:-
திருப்பூர் மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் இன்று (சனிக்கிழமை) தாராபுரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்.திருப்பூர் கூட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பங்கேற்கிறார்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை அவர் பெறுகிறார். அரசு மூலம் தீர்வு காணக்கூடிய பொதுப்பிரச்சினைகளை எழுத்து பூர்வமாக மக்கள் பெட்டியில் போட்டால் அதற்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார். தாராபுரம் பஸ் நிலையம் எதிரில் தேன்மலர் பள்ளி அருகில் பிரசார பொதுக்கூட்டம் மதியம் 1 மணிக்கு நடைபெற உள்ளது. காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
மனு ரசீது
இதற்காக பொதுக்கூட்ட அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரளானவர்கள் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்குக்குள் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொதுப்பிரச்சினைகளை மனுக்களில் எழுதி வர வேண்டும். பொதுக்கூட்ட அரங்குக்கு முன்பு கட்சியினர் அந்த மனுக்களை பதிவு செய்து அதற்கு பதிவு எண் வழங்குவார்கள். பதிவு எண் கொண்ட ரசீதை மனுக்களில் இணைத்து அங்கு வைத்துள்ள பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதியம் தாராபுரம் வருகிறார். அவருக்கு தி.மு.க. திருப்பூர் மத்திய, திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதன்பிறகு பிரசார உரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் வருகிறார். இரவு திருப்பூரில் தொழிலதிபர் வீட்டில் தங்குகிறார்.
திருப்பூர்
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு அருகில் பள்ளக்காட்டுபுதூரில் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தி.மு.க. திருப்பூர் வடக்கு, திருப்பூர் மத்திய மாவட்டத்தை சேர்ந்த திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவினாசி, பல்லடம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்கிறார்கள். இதற்காக பொதுக்கூட்ட அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் பிரசார நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story