‘சென்னைக்கு கோடை காலத்தில் கூடுதல் குடிநீர் வினியோகம்’; சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் பேட்டி
பூண்டி, செம்பரம்பாக்கம் புழல் உள்ளிட்ட ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால், கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு கூடுதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
‘மியாவாக்கி காடுகள்’
சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் 38 ஆயிரம் சதுர அடியில் 55 வகையான 10ஆயிரம் மரக்கன்றுகளுடன் கூடிய மியாவாக்கி காடுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டார்.
அதன் பின்னர் பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை நகர்புறங்களில் மக்கள் இயற்கையான காற்றை பெறக்கூடிய வகையில் 1000 மியாவாக்கி என்ற அடர்வன காடுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 காடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 51 காடுகள் தயார் நிலையில் இருக்கின்றனர். இதில் புழுதிவாக்கம் 36-வது காடாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த காடுகளில் முழுவதும் நாட்டு வகை மரங்கள், மூலிகை உள்பட அனைத்து தரப்பு மரங்கள் நடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல சிறு உயிரினங்கள், ஈரப்பதமான காற்றினை பெறவும், வெப்பத்தை குறைக்கவும் பயன்படும். இப்பகுதி மக்கள் நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கு இடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூடுதலாக குடிநீர்
சென்னையில் தண்ணீர் பிரச்சினையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குடிநீர் வாரியத்துடன் இணைந்து கிணறுகள், குளங்கள் புதுப்பித்து தூர்வாரப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு திட்டம் முழுவதுமாக செயல்பட்டு வருகிறது. கடந்த கோடை காலங்களை விட இந்தாண்டு கூடுதல் நீர் இருப்பு உள்ளது. நீர் ஆதாரத்திற்கான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய 4 ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கப்படும்.
தேர்தல் பணிக்கான தேர்தல் ஆணைய விதிமுறைகளுடன் சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் உள்ள 3,740 வாக்குச் சாவடிகள் 6,100 என அதிகரிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பணியில் 20 ஆயிரம் பேர் ஈடுபடுவர்கள்.
தற்போது, வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை உயர்ந்ததால் தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரம் பேராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்ற கூடிய அதிகாரிகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வாக்கு சாவடி அலுவலர்கள் நியமிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி
சென்னையில் உள்ள 1½ லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. சென்னையில் 64 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதனை இரட்டிப்பாக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் முதியவர்கள், நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி வழங்க மத்திய அரசு அனுமதியளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சென்னை தெற்கு மாநகராட்சி துணை கமிஷனர் ஆல்பி ஜான், பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன், முன்னாள் கவுன்சிலர் ஜெ.கே.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story