குளித்தலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து தர்ணா
குளித்தலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து தர்ணா
குளித்தலை
குளித்தலை ஊராட்சி ஒன்றியம், ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட வாளாந்தூரில் சுடுகாட்டுப் பாதையை சரி செய்து மயான எரிமேடை, மயான கொட்டகை அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். காமன் கோவில் சாலையை மேம்படுத்தி தேங்கி நிற்கும் தண்ணீர் வடிய வடிகால் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் வாளாந்தூர் பொதுமக்கள் சார்பில் குளித்தலை தாசில்தார் அலுவலகம் முன்பு கடந்த 17- ந் தேதி ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடந்த 16-ந் தேதி நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் ஒப்பாரி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த கூட்டத்தில் வாளாந்தூர் பகுதியில் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிப்பதாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வாளாந்தூரில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை குறித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசெல்வன், வாளாந்தூர் கிளை செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்கச் சென்றனர். அப்போது ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து முத்துசெல்வன், பாலசுப்பிரமணி ஆகிய இருவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், வாளாந்தூர் பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்ததன்பேரில், தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story