ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்று நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து விலகுகிறேன் அமைச்சர் செல்லூர் ராஜூ
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்று நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து விலகி விடுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை, பிப்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்று நிரூபித்தால் பொது வாழ்வில் இருந்து விலகி விடுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
நூலக கட்டிடம்
மதுரை மாநகராட்சி 88, 90, 92 வார்டுகளில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.72 லட்சத்து 40 ஆயிரம் செலவில் பேவர் பிளாக் சாலைகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடக்க விழா மற்றும் புதிய சமுதாய கூடம் மற்றும் நூலக கட்டிட திறப்பு விழா நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ சோலையழகுபுரத்தில் நடந்த வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 644 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 44 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சட்டசபை தேர்தலின் போது நமக்கு நாமே என்ற நாடகத்தை ஸ்டாலின் நடத்தினார். அந்த நாடகம் படுதோல்வியில் முடிந்து போனது. வரும் தேர்தலுக்காக தற்போது குறை தீர்க்கும் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொண்டு பேசுவதில்லை. தனது சொந்த கட்சியினரையே பேச விடுகிறார். ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு பெட்டியில் இருந்து மனுக்கள் எடுத்து பேசுகிறார். அவரின் இந்த தேர்தல் நாடகமும் தோல்வியில் போய் விடும்.
ஜப்பான் நிதி
மதுரை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் எய்ம்ஸ் வராது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்படும் என்று பொய்யுரைகளை பேசி விட்டு சென்று இருக்கிறார். மதுரைக்கு நிச்சயம் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வரும். எம்ய்ஸ் ஆஸ்பத்திரியின் திட்ட மதிப்பீடு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வதற்கு சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. அதே போல் ஏராளமான மருத்துவ திட்டங்களுக்கு மத்திய அரசு நேரிடையாக நிதி வழங்கி வருகிறது. எனவே தான் மதுரை எம்ய்ஸ் திட்டத்திற்கு மத்திய அரசு தனது நிதியை ஒதுக்காமல் ஜப்பான் நிதி நிறுவனத்துடன் இணைந்து பணியினை தொடங்குகிறது. மற்ற மாநிலங்களில் சுகாதார பணிகள் மந்த நிலையில் இருப்பதால் அங்கு அமைக்கப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய அரசு நேரடி நிதி ஒதுக்குகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டினை ஸ்டாலின் கூறுகிறார். அதில் ஊழல் என்று நிரூபித்து விட்டால் நான் பொது வாழ்வில் இருந்து விலகுகிறேன். நான் ஸ்டாலினிடம் கேட்கிறேன் ஊழலை பற்றியும், சட்டம் ஒழுங்கை பற்றியும் நீங்கள் எல்லாம் பேசலாமா?. தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், கம்யூனிஸ்டு கவுன்சிலர் லீலாவதி படுகொலைகளுக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள்.
ஊழல்
தி.மு.க. ஆட்சியின்போது வீட்டின் முன்பு மணல் கொட்டினால் கூட தி.மு.க.வினர் வீட்டில் வந்து மிரட்டி பணம் பறித்து சென்ற நிகழ்வுகளை எல்லாம் மதுரை மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். அதுமட்டுமா நில அபகரிப்பு செய்து ஏழை மக்களின் நிலங்களை எல்லாம் மிரட்டி பறித்தீர்கள். நாடு சிரிக்கும் அளவுக்கு பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தீர்கள். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் உங்களது மத்திய மந்திரி ராஜாவையும், கனிமொழியையும் கூட்டணியான காங்கிரஸ் அரசு கைது செய்தது. அப்போது பதவி சுகத்திற்காக காங்கிரசுக்கு அடிமையாக இருந்தீர்கள்.
தி.மு.க. ஆட்சியில் திட்டங்களை போடுவதே ஊழல் செய்வதற்காக தான் என்பதனை மக்களே நன்கு அறிவார்கள். அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன். ஊழலுக்காக நீங்கள் கட்டிய பழங்காநத்தம் மேம்பாலம் மக்களுக்கு பயன்படாமல் காட்சி பொருளாக இருக்கிறது. மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருந்து மாநிலத்தில் கொலை-கொள்ளைகளை அரங்கேறிய தி.மு.க. இனி ஒரு போதும் ஆட்சிக்கு வரவே முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story