ஊராட்சி மன்ற பெண் உறுப்பினரின் ஸ்கூட்டர் பறிமுதல்; தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்


ஊராட்சி மன்ற பெண் உறுப்பினரின் ஸ்கூட்டர் பறிமுதல்; தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2021 2:12 AM IST (Updated: 20 Feb 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற பெண் உறுப்பினரின் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து, அவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் எசனை கீழக்கரை நடுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசு. அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி கவிதா (வயது 41). இவர் கீழக்கரை ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ஒரு ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். இந்நிலையில் கவிதா அந்த நிதி நிறுவனத்திற்கு மாத தவணையை சரியாக ெசலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று மதியம் கவிதாவை, நிறுவனத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது கவிதா நிறுவனத்தின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, அதன் டிக்கியில் 5 பவுன் தாலி சங்கிலியும், 23 கிராம் தங்க வளையல்களையும், ரூ.5,900 ரொக்கத்தையும் வைத்து விட்டு சென்றதாகவும், நிறுவனத்தில் ஊழியர்களிடம் கவிதா பேசிக்கொண்டிருந்த போது, மற்ற ஊழியர்கள் கவிதாவின் ஸ்கூட்டரை பறிமுதல் செய்து ஆட்டோவில் ஏற்றி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த கவிதா, ஸ்கூட்டரை நான் தவணைத்தொகை செலுத்தி எடுத்துக்கொள்கிறேன், அதில் இருந்த நகை-பணத்தை எடுத்து தருமாறு, கூறியுள்ளார். ஆனால் அவரது பேச்சை அந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கவிதா, ஸ்கூட்டரில் உள்ள நகை-பணத்தை எடுத்து தருமாறு நிதி நிறுவனத்தின் உள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீசார் கவிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் முன்னிலையில் கவிதாவின் ஸ்கூட்டர் டிக்கி திறக்கப்பட்டது. ஆனால் அதில் வளையல்கள் மட்டும் இருந்தது. தாலி சங்கிலியும், பணமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் ஸ்கூட்டரின் டிக்கி முன்கூட்டியே திறக்கப்பட்டு தாலி சங்கிலியும், பணத்தையும் நிதி நிறுவன ஊழியர்கள் எடுத்து இருக்கலாம் என்று கவிதா தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்தும், கவிதா உண்மையிலேயே ஸ்கூட்டரில் தாலி சங்கிலியும், பணமும் வைத்திருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story