2வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு


2வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
x
தினத்தந்தி 20 Feb 2021 2:36 AM IST (Updated: 20 Feb 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் வாலிபர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டாா். 2வது நாளாக உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

கடலூர், 

கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கிருஷ்ணன் (வயது 30). இவர் கடந்த 16-ந்தேதி இரவு தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து, கடலூர் சுப்புராயலுநகர் பூந்தோட்டம் சாலையை சேர்ந்த பிரபல ரவுடி வீரா என்கிற வீரங்கன் (35) என்பவரை தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பினார். இதையடுத்து புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை பிடித்து, திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் கிருஷ்ணனை மட்டும் மறுநாள் அதிகாலை மற்ற கொலையாளிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தீபனை கழுத்தை அறுக்க முயன்றபோது என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து கிருஷ்ணன் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், பண்ருட்டி மாஜிஸ்திரேட்டு மணிவர்மன் முன்னிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு கிருஷ்ணன் சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தி அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக அவரது உறவினர்கள், கிருஷ்ணன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுப்பு தெரிவித்து, மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால் கிருஷ்ணன் உடல், அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணன் வசித்த குப்பங்குளத்தில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியாட்கள் தீவிர சோதனைக்கு பிறகே தெருவுக்குள் செல்ல போலீசார் அனுமதித்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Next Story