காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
திருச்சி உறையூரில் காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். வீட்டின் மொட்டை மாடியில் பேசிக்கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் திடீரென நடந்துள்ளது.
திருச்சி,
திருச்சி உறையூரில் காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். வீட்டின் மொட்டை மாடியில் பேசிக்கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் திடீரென நடந்துள்ளது.
கல்லூரி மாணவியுடன் காதல்
திருச்சி மாவட்டம் லால்குடி வெள்ளனூரை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 28). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார். திருச்சி உறையூர் பகுதியில் உள்ள 19 வயது கல்லூரி மாணவியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அது காதலாக மாறியது. இவர்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டு தரப்பினருக்கும் தெரிந்துள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக மணிகண்டனுடன் பழகுவதை அந்த மாணவி தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
கத்திக்குத்து
இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மணிகண்டன் உறையூரில் உள்ள மாணவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் கத்தியால் மாணவியின் கழுத்தில் குத்தினார். பின்னர் தோல்பட்டையில் கத்தியால் சரமாரியாக கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். சிறிதுநேரத்தில் மணிகண்டன், தனது காதில் விஷத்தை ஊற்றி கொண்டு மயங்கி விழுந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இதைக்கண்ட அந்த பகுதியினர் உறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, உறையூர் இன்ஸ்பெக்டர் மணிராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியையும், மணிகண்டனையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இரு தரப்பிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி உறையூரில் காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story