வெப்ப அயற்சி காரணமாக முட்டையிடும் கோழிகளில் தீவன எடுப்பு குறையும் - ஆராய்ச்சி நிலையம் தகவல்


வெப்ப அயற்சி காரணமாக முட்டையிடும் கோழிகளில் தீவன எடுப்பு குறையும் - ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 20 Feb 2021 3:10 AM IST (Updated: 20 Feb 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

வெப்ப அயற்சி காரணமாக முட்டையிடும் கோழிகளில் தீவன எடுப்பு குறையும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. 

இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் 4 நாட்களில் அதிகபட்சமாக முறையே 90, 90, 90, 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 50, 50, 50, 45 சதவீதமாகவும் இருக்கும்.

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழை பெய்ய வாய்ப்பில்லை. கோடை காலம் தொடங்க உள்ளதால் பகல் மற்றும் இரவு வெப்ப நிலைகளில் மாற்றம் காணப்படுகிறது. இந்த வெப்ப அயற்சி காரணமாக முட்டையிடும் கோழிகளில் தீவன எடுப்பு குறையும். மேலும் வெப்ப அதிர்ச்சி காரணமாக கோழிகள் இறக்கக்கூடும். கோடை காலத்தை சமாளிக்கவும், வெப்பத் தாக்கத்தில் இருந்து கோழிகளை பாதுகாக்கவும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கோழிகளுக்கு தீவனம் அளிக்கக்கூடாது. 

அனைத்து வகையான கோழிகளுக்கும் தற்போது பகல் நேரங்களில் வெப்பநிலை உயர்ந்தும், அதிகாலையில் வெப்பநிலை குறைந்தும் காணப்படுவதால் பண்ணை கோழிகள் மற்றும் புறக்கடை கோழிகள் வெப்ப அயற்சிக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. எனவே பண்ணையாளர்கள் நச்சுயிரி தாக்குதல் வராமல் தடுக்க தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள்வதோடு, கிருமிநாசினியை தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story