தாம்பரத்தில் கார் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கைது
தாம்பரத்தில் கார் உரிமையாளரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்
தாம்பரம், சானடோரியம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவமனை சிக்னலில் நேற்று முன்தினம் மதியம் தனியார் டிராவல்ஸ் கார் ஒன்றை டிரைவர் வெங்கட்ராமன் என்பவர் ஓட்டி வந்த நிலையில், வளைவில் திரும்பினார்.அப்போது அங்கு பணியில் இருந்த குரோம்பேட்டை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் என்பவர் காரை மடக்கி, ‘ஏன் ‘யூடர்ன்’ செய்தாய்’, என்று கேட்டுள்ளார். அதற்கு டிரைவர் வெங்கட்ராமன், தெரியாமல் திரும்பி விட்டேன், அபராதம் கட்டி விடுகிறேன், வாகனத்தை அனுப்பி விடுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு வாகனத்தை பறிமுதல் செய்த கிருஷ்ணகுமார், குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி காரை பறிமுதல் செய்து, தனியார் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தினார்.
இத்தகவல் அறிந்த காரின் உரிமையாளரான சென்னை அசோக் நகரை சேர்ந்த ஏழுமலை (வயது 42) என்பவர் நேற்று நேரில் வந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசியுள்ளார். அப்போதும் அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
கையும் களவுமாக பிடிபட்டார்
இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஏழுமலை புகார் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று மதியம் குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பினர்.
அதன்பின்னர், அதை சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரிடம், ஏழுமலை கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கிருஷ்ணகுமாரை, கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story