தூத்துக்குடியில் 32 பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர்; போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்
தூத்துக்குடியில் 32 பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 32 பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர்களை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வழங்கினார்.
பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர்
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 32 புதிய ஸ்கூட்டர்களை வழங்கி உள்ளது. அவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
இதில் மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு, பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
விழிப்புணர்வு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு தமிழக காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீஸ் அதிகாரிகள், பெண்கள் பயிலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று சமூக ஊடகங்கள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆள் கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதற்கு உதவியாக தமிழக அரசு ரூ.34 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான 32 ஸ்கூட்டர்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பேரணி
இதைத்தொடர்ந்து, புதிய ஸ்கூட்டர்களில் பெண் போலீசார் பேரணியாக சென்றனர். அந்த பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான் தலைமையில் மோட்டார் வாகனப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், அந்தோணி ராபிஸ்டன் கென்னடி மற்றும் பலர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story