தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 15 பவுன் நகை அபேஸ்


தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம்  15 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 20 Feb 2021 8:09 PM IST (Updated: 20 Feb 2021 8:09 PM IST)
t-max-icont-min-icon

ஈத்தாமொழி அருகே கணவருடன் சேர்ந்து வாழ தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 15 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈத்தாமொழி:
ஈத்தாமொழி அருகே கணவருடன் சேர்ந்து வாழ தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 15 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தோஷம் கழிப்பதாக கூறி...
ஈத்தாமொழி அருகே கல்லவீரியன் விளையை சேர்ந்தவர் கால பெருமாள். இவருடைய மகள் ராதிகா (வயது 50), பி.காம். பட்டதாரி. திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் அடிக்கடி நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். 
அதன்படி கடந்த 16-ந் தேதி அந்த கோவிலுக்கு சென்றார். அப்போது ராதிகாவிடம் மர்ம ஆசாமி ஒருவர் பேச்சுக் கொடுத்துள்ளார். எனது பெயர் முருகன் என்று அறிமுகப்படுத்தி கொண்ட அவர் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. இதனால் உங்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளதாகவும், நான் சொன்னபடி கேட்டால் உங்களது தோஷம் நீங்கி கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று கூறியுள்ளார்.
15 பவுன் நகை அபேஸ்
இதனை நம்பிய ராதிகா உடனே அந்த மர்ம ஆசாமியை அதே பகுதியை சேர்ந்த முப்புடாதி (27) என்பவரது ஆட்டோவில் ஈத்தாமொழிக்கு அழைத்து வந்தார். அப்போது காட்டுப்புதூரை சேர்ந்த அய்யப்பன் என்பவரும் அந்த ஆட்டோவில் வந்துள்ளார். பின்னர் ராதிகா வீட்டிற்கு வந்த மர்ம ஆசாமி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன் பிறகு ராதிகாவிடம் உங்களுடைய தாலி சங்கிலி மற்றும் காப்பையும் பூஜையில் வைக்குமாறு கூறினார்.
இதையடுத்து ராதிகா 15 பவுன் எடையுள்ள சங்கிலி மற்றும் தங்க காப்பை கழற்றி கொடுத்துள்ளார். அதனை பூஜையில் வைத்த மர்ம ஆசாமி நகைகளை கொண்டு போய் வெளியே குழிதோண்டி புதைத்து விட்டு வருகிறேன். அந்த நகையை, நான் சொன்ன பிறகு அந்த இடத்தில் நீங்கள் தோண்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது எனக்கு ஒரு அறிகுறி தென்படும், அதன் பிறகு நான் நேரில் வருவேன். அதற்குள் உங்கள் பிரச்சினை சரியாகி உங்களுடைய கணவருடன் சேர்ந்து வாழலாம் என ஆசைவார்த்தை கூறி விட்டு, அதே ஆட்டோவில் திரும்பிச் சென்று விட்டார். 
போலீஸ் விசாரணை
பின்னர் மறுநாள் காலை அந்த ஆசாமி சொன்ன இடத்தில் தோண்டி பார்த்தபோது ராதிகாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதன்பிறகு தான், நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை உணர்ந்தார். இதுகுறித்து ராதிகா ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆட்டோ டிரைவர் முப்புடாதி மற்றும் காட்டுப்புதூரை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 2 பேரை பிடித்து மர்மஆசாமி யாரென்று உங்களுக்கு தெரியுமா? என விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 15 பவுன் நகையை மர்ம ஆசாமி அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story