கோத்தகிரியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரம்


கோத்தகிரியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரம்
x
தினத்தந்தி 20 Feb 2021 8:28 PM IST (Updated: 20 Feb 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

மார்க்கெட்டுகளில் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், கோத்தகிரியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். 

இதேபோன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த  புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் கடந்த சில வாரங்களாக நீலகிரி உருளைக்கிழங்குக்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. 

எனவே கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, உயிலட்டி உள்ளிட்ட பகுதிகளில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்களது நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்குகளை தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். 
இதுகுறித்து உயிலட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ் கூறியதாவது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது நிலத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்டு இருந்தேன். உயர்தர விதைகளான கிரிராஜா, குப்பிரி ஜோதி, ஜலந்தர் மற்றும் பண்ணை கிழங்கு விதைக்கப்பட்டது. 

தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக டிராக்டர் மூலம் நிலத்தை உழுது உருளைக்கிழங்கு பயிரிட்டு, உரங்களை இட்டு நன்கு பராமரித்து வந்தேன். தொடர்ந்து போதுமான மழையும் பெய்ததால், தற்போது உருளைக்கிழங்குகள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக விட்டன.

தற்போது மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கு ரூ.1,650 முதல் ரூ.1,750 வரை தரத்துக்கு ஏற்ப கொள்முதல் செய்யப்படுகிறது. இதேபோன்று கோத்தகிரி மார்க்கெட்டில் கிலோ ரூ.45 முதல் ரூ.46 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. 

நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருவதால், உருளைக்கிழங்குகளை அறுவடை செய்து, விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகிறேன். விலை உயர்ந்து உள்ளதால், உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story